புதுடில்லி :
டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் மையமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் டில்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட ரோஹ்தக் பகுதி, டில்லியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.