கோயம்புத்தூர் :
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாநிலம் முழுவதும் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற திட்டத்தின் கீழ் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பிரச்சார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இப்பயணத்தின் நோக்கம், திமுக ஆட்சியின் தோல்விகளை வெளிக்கொணர்ந்து, சட்டமும் அமைதியும் நலமும் நிறைந்த அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இபிஎஸ் எழுப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “கோயில்களைப் பார்க்க திமுகவுக்கு பொறாமை. கோவில் உண்டியலில் மக்கள் போடும் பணத்தை கொண்டு கல்லூரி கட்டுவதெல்லாம் நியாயமா ? மக்கள் அந்த பணத்தை கோவிலுக்கே பயன்படவே கொடுக்கிறார்கள். அரசு கல்விக்கூடம் கட்ட விரும்பினால், அதன் சொந்த நிதியில் கட்ட வேண்டும். ஆனால், அறநிலையத்துறை வழியாக கோவில்களில் இருந்து பணம் எடுத்து கல்வி வளாகங்கள் கட்டப்படுவது தவறு. இது சதியாகவே மக்கள் பார்க்கிறார்கள்,” என்றார்.
அவரது இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. “கல்வி வளர்ச்சிக்காக கோவில் நிதி பயன்படுத்துவதில் தவறேது ?”, “இபிஎஸ் கல்வியைவிட கோவிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரா?” என்பன போன்ற விமர்சனங்கள் இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து, இந்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாகப் பேசப்படுகிறது. திமுக தரப்பில் இதற்கு எதிர்வினை வருமா என்பதை பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.