புதுடெல்லி : லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “ராகுல் எதையும் எதிர்மறையாகவே பார்த்துப் பேசுகிறவர். அவரை யாரும் பெரிதாக மதிப்பதில்லை. மக்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, “இந்தியா எந்த வெளிநாட்டு அழுத்தத்துக்கும் குனியாது. நாட்டின் நலனை முன்னிட்டு மட்டுமே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் என் வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டிரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார்” என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை கண்டித்து பியூஷ் கோயல் மேலும் கூறுகையில்,
“நாங்கள் தன்னம்பிக்கையுடன் பேசுகிறோம். இன்று இந்தியா, யாருடனும் சமமாக பேச்சுவார்த்தை நடத்தும் வலிமை பெற்ற நாடாக மாறியுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) காலத்திலிருந்த இந்தியா அல்ல. அந்த நேரத்தில், தேசிய நலனுக்குப் பதிலாக வியாபார ஒப்பந்தங்களுக்கு கெஞ்சிக் கொண்டிருந்தனர். ராகுல் மற்றும் அவரது கட்சி எப்போதும் எதிர்மறையானதையே பேசுகிறார்கள். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இன்று வரை நாட்டிற்காக நேர்மறையான திட்டங்களை காங்கிரஸ் முன்வைக்கவில்லை,” என்றார்.