தமிழகத்தில் திமுக அரசு வெறும் விளம்பர ஆட்சியாக இயங்கி வருவதாகவும், மத்திய அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தங்களது பெயரை ஒட்டுவது மட்டுமே செய்கின்றதாகவும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, பவானி ஆற்றை கடந்தே பள்ளி, வேலை மற்றும் மருத்துவ சேவைகளை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வெள்ளக் காலங்களில் பரிசல் சேவை பாதிக்கப்படுவதால், மக்கள் சுமார் 8 கி.மீ தூரத்தை சுற்றிச் செல்லும் வேதனைக்கு உள்ளாகின்றனர் என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக உயர்மட்டப் பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டினார். இது போல், தமிழகத்தின் பல கிராமங்களில் சாலைகள் இல்லாத சூழ்நிலையில், 100% சாலை வசதி உள்ள மாநிலம் என திமுக அரசு தவறான விளம்பரத்தை பரப்புவதாகவும் அவர் விமர்சித்தார்.
மத்திய அரசின் “பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா” திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வரை தமிழகத்திற்கு ரூ.5,886 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குப் பதிலாக, ‘முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து, அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் திமுக அரசு செயல்படுவதாக அவர் கூறினார்.
“2025-ம் ஆண்டிலும் கிராம மாணவர்கள் பரிசலில் பயணம் செய்து கல்விக்குச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. இது தமிழகத்தின் பின்னடைவை காட்டும் செய்தி,” என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வாடகைக்கு ஆட்களைப் பிடித்து திமுகவைக் கெளரவிப்பது போதாது, அதற்கேற்ற செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதன் நிறைவாக, அம்மாபாளையம் பகுதியில் பவானி ஆற்றைக் கடக்க உயர்மட்டப் பாலம் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்றும், அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.