திருநெல்வேலி : தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரு முறைகள் வென்ற வரலாறு கிடையாது என தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “முருக பக்தர் மாநாட்டை அரசியல் கோணத்தில் மாற்றவோ, வேறு மதங்களை விமர்சிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. இந்த மாநாடு பக்தர்களுக்காக மட்டும் நடத்தப்பட்டது. இதில் ஓட்டு கேட்பதுபோன்ற எந்த அரசியல் நோக்கும் இருந்ததில்லை” எனத் தெரிவித்தார்.
திமுக வரலாற்றை சுட்டிக்காட்டிய அவர், 1989ல் எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் திமுக சில ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு 1991ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. 1996ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், தொடர்ந்து இரண்டு முறைகள் அவர்கள் ஆட்சியிலிருந்ததற்கான வரலாறு இல்லை. நம்முடைய கூட்டணி சரியாக செயல்பட்டிருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றார்.
திருச்செந்தூர் கோவிலின் கும்பாபிஷேகத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த திமுக முயற்சிக்கிறது என்றும், “தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் தோல்வி பற்றிய பயம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரம் குறித்து முடிவெடுப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.