சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அரசின் செயல்திறனின்மையை மறைக்க ‘ரயில் கட்டண உயர்வு’ பற்றி நாடகம் செய்கிறார் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை-வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தல் மற்றும் கட்டுமானப் பொருட்களின் கிடைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் திட்டம் நடைமுறைக்கு வராமற்போயுள்ளதாக அவர் கூறினார்.
இதனால், சாலைப் பயணம் சிரமமாக இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணிக்கத் தேர்வு செய்துள்ளார் என்றும், இது தம்முடைய அரசின் தோல்வியை மறைக்கும் நாடகமாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
அதேவேளை, ரயில்வே கட்டண உயர்வு மிக குறைவாகவே உள்ளது என்றும், புறநகர் ரயில் பயணிகள், மாதாந்திர பயண அட்டைகள் பெறுவோர் மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லை என்றும் அவர் கூறினார். தூரநகர மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் சிறிய அளவிலான (1 பைசா – 2 பைசா / கிலோமீட்டர்) கட்டண உயர்வே அமலுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்ணாமலை மேலும் கூறியதாவது :
கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் உள்ளிட்ட அனைத்திலும் பல மடங்கு கட்டண உயர்வுகளை செய்துவிட்டது. அந்த அரசே இப்போது மிகவும் குறைந்த அளவிலான ரயில்வே கட்டண உயர்வுக்கு எதிராகப் பேசி நாடகமாடுகிறது என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும்போதும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதும், இதற்குச் சான்றாகும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.