காஞ்சிபுரம் : கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று, சக மாணவர்களுடன் சுற்றுலாவாக காஞ்சிபுரம் வருகைதந்த அவர், பல்வேறு கோயில்களை சுற்றி பார்த்ததுடன், பிறகு நத்தப்பேட்டை ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, ஒருவரின் காலணி ஏரியில் விழுந்துள்ளது. இதனைக் கண்ட லக்ஷன், “தனக்கு நீச்சல் தெரியும்” என கூறி, காலணியை எடுத்து வர ஏரியில் இறங்கியுள்ளார். ஆனால், நீரில் திடீரென மூச்சுத் திணறி நீந்த முடியாமல் மூழ்கியுள்ளார்.
சம்பவத்தை கண்ட நண்பர்கள் உடனே அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், நீரில் மூழ்கிய லக்ஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்ததனால் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.