விருதுநகர் :
மதுரை-குற்றாலம் பாதையில் பயணித்த அரசு பேருந்தில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த அரசு பேருந்தை, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கரன் (வயது 52) இன்று மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கி இயக்கி வந்தார். பேருந்து தென்காசி மாவட்டம் இடைகால் அருகே வந்தபோது, பின்புற ‘லேயர் ஜாயிண்ட்’ பகுதியில் உள்ள சக்கரங்கள் மொத்தமாக கழன்று ஓடியது.
இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், ஓட்டுநர் சங்கரன் நேர்த்தியாக கையாண்டதின் மூலம் பேருந்தை மெதுவாக கட்டுப்படுத்தி நிறுத்தினார். விபத்து நேரத்தில் சுமார் 87 பேர் பேருந்தில் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் நான்கு பயணிகள், மாணவர்கள் உட்பட, லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சில நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.