ஈரான்-இஸ்ரேல் மோதல் ஆறாம் நாளில் அடியெடுத்து வைக்கிறது. இதில் உயிரிழந்தவர்களில் 90% பேர் பொதுமக்கள் என்பதே, இந்த போர் எவ்வளவு வலியுடனும், எதிர்பாராததுமாகவும் பரவி வருகிறது என்பதை உறுதி செய்கிறது.
போர் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், உயிரிழந்த பாவம் பொதுமக்கள். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் வெறும் பாதுகாப்பு நடவடிக்கையா, அல்லது அது ஒரு நுட்பமான அரசியல் நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது.
இலக்கு ஒன்றே… வழி மட்டும் வேறு !
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு பொதுவான நோக்கம் உள்ளது — ஈரானின் அணுசக்தி வளர்ச்சியை கட்டுப்படுத்துவது. ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா “ஒப்பந்தம், ஒழுங்கு, அமைதி” எனப் பேச்சுவார்த்தையை நம்புகிறது. ஆனால் நெதன்யாகுவின் இஸ்ரேல் “செயல்பாடு மட்டுமே தீர்வு” என்கிறது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரிக்கும் அமைப்புகள் மூலம் ஆபத்து உருவாகும் நிலையில், ஈரான் அணு ஆயுதம் பெற்று விட்டால், அது இஸ்ரேலுக்கு பேரழிவாக அமையும் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு.
நெதன்யாகு – கட்டுப்பாடற்ற தலைமை ?
தற்போதைய சூழ்நிலையில் நெதன்யாகுவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த மாதங்களிலேயே ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்ட அவர், தற்போது அமெரிக்கா ஆதரிக்காவிட்டாலும் தனியாகவே செயல்பட தயாராக இருக்கிறார்.
அமெரிக்க உளவு அமைப்புகள், அரசியல் தலைவர்கள் நடத்திய ஆலோசனைகளில் இதுவே முக்கிய கருத்தாக முன்வைக்கப்பட்டுள்ளது.