தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில், உலகச் சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவுல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “சிந்தனை நாள்” விழா கொண்டாட்டங்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் மூன்று நாட்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 15 முன்னணிப் பள்ளிகளிலிருந்து 252 சாரணர்கள், 240 சாரணியர்கள் மற்றும் 30 பொறுப்பாசிரியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம் தயாரித்தல், கிராமிய குழு நடனம், ஓவியம் வரைதல், கழிவுப் பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் செய்தல், ரங்கோலி, சமையல் கலை, காய்கறி மற்றும் பழங்கள் மூலம் உருவங்கள் செதுக்குதல், கலர் பார்ட்டி மற்றும் கூடாரம் அமைத்தல் என ஒன்பது வகையான விறுவிறுப்பான போட்டிகள் சாரணர் மற்றும் சாரணியர்களுக்குத் தனித்தனிப் பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் சாரணர் பிரிவில் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றன. சாரணியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குத் தொழிலதிபர் விவிலியன் மற்றும் பிஷப் கால்டுவெல் கல்லூரி முதல்வர் ஜெயா ஆகியோர் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.
விழாவின் ஒரு பகுதியாக, தேசியப் பயிற்சியாளர்கள் ஐடா, கிறிஸ்டி ஹேம்லட் விஜி, கார்த்திக், ராஜகோபால் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினர். மேலும், சமூக சேவையின் அங்கமாகப் பல்வேறு பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள், ஆதரவற்ற ஆசிரமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் செ. எட்வர்ட் ஜான்சன்பால், துணைச் செயலாளர் சகாய மேரி வீனஸ், மாவட்ட ஆணையர் பி. சரவணன் மற்றும் மாவட்டப் பயிற்சி ஆணையர்கள் ஜெயாசண்முகம், கார்த்திக், ஜான் சௌந்திரராஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
















