மதுரை மாவட்டம் மேலூரில், 120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றக் கட்டிடத்தின் அவலநிலையைக் கண்டித்து, கடந்த சில தினங்களாகப் போராட்டக் களம் அதிர்கிறது. நீதிமன்றப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கட்டிடத்தின் மேற்கூரைகள் அடிக்கடி இடிந்து விழுந்து உயிர் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய ‘ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்’ (Integrated Court Complex) அமைக்கக் கோரி மேலூர் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்த நீதிக்கான போராட்டம் கடந்த 12-ஆம் தேதி மேலூர் பேருந்து நிலையம் முன்பாக மறியலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 16-ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, பேருந்து நிலையம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் கைகோர்த்தது போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியது. 17-ஆம் தேதி நீதிமன்றச் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை நீண்ட ‘மனிதச் சங்கிலி’ போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், தாலுகா அலுவலகச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக, சென்னை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் (சூரக்குண்டு பகுதி) நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு மேலூர் நகரமே முழு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், வர்த்தகச் சங்கத்தினர் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மேலூர் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. சினிமா திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முழு அடைப்பால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நீண்டகாலத் தேவையைக் கருதி பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவை வழங்கினர்.
மேலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமேனி, செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மேகவர்ணன், துணைச் செயலாளர் ஞானசுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும், மேலூர் முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயச் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், வாடகை வேன் மற்றும் கார் ஓட்டுநர் – உரிமையாளர் சங்கம் எனப் பல அமைப்புகள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தன. “இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அச்சத்துடனேயே பணியாற்ற வேண்டியுள்ளது; அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய நவீன ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டாவிடில் போராட்டம் மேலும் வலுவடையும்” என வழக்கறிஞர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

















