தமிழக அரசியல் களத்தில் ‘எதிர்பாராததைத் தேர்ந்தெடுப்பதில்’ வல்லவரான டிடிவி.தினகரன், நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜகவின் வியூகத்திற்கு இணங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) கைகோர்த்துள்ளார். இதன் மூலம் பாஜக தனது இலக்கை எட்டியிருந்தாலும், தனித்துவமான அரசியல் நடத்தி வந்த தினகரன், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பல கேள்விகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்த அமமுக, தற்போது அதே அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது தென் மாவட்ட அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
2021 தேர்தலில், முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் உள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்குப் பெரும் சவாலாக அமமுக விளங்கியது. “ஓபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களை ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாக மாற்றிவிட்டார்” என்ற பரப்புரை அப்போது அமமுகவுக்குக் கைகொடுத்தது. ஆனால், இன்று அதே பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தினகரன் கூட்டணிக்குள் நுழைந்திருப்பது, அவரது அடிப்படைத் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதுவரை எதிர்ப்பு அரசியல் நடத்திப் பழகிய அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள், களத்தில் ஒருவருக்கொருவர் எப்படி இணைந்து பணியாற்றுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கூட்டணி குறித்து அதிருப்தியில் உள்ள அமமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கடந்த தேர்தலில் அமமுக பெற்ற 2.3 சதவீத வாக்குகளுக்கு எஸ்டிபிஐ (SDPI) போன்ற கட்சிகளின் சிறுபான்மையினர் வாக்குகளும் ஒரு முக்கியக் காரணம். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி ‘குக்கருக்குள்’ சிக்க வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணியால் தினகரன் ஒருவேளை சட்டமன்றத்திற்குச் செல்லலாம், அல்லது அமமுகவின் வாக்கு சதவீதம் சற்று உயரலாம். ஆனால், இதற்காகத் தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தையும், சுயபலத்தையும் தினகரன் இழக்க நேரிடும். ஒரு காலத்தில் அவருக்குப் பின்னால் நின்ற தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் இன்று திமுகவில் உயர்ந்த இடங்களில் இருப்பதைப் பார்க்கும்போது, தினகரன் எடுத்திருக்கும் இந்த முடிவு அவரது எதிர்காலக் கேள்விக் குறியாக்கும்” என ஆதங்கப்படுகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு ஒருவேளை கூட்டணி ஆட்சி அமைந்தால், பழனிசாமி தனக்குக் கீழ் தினகரனுக்கு அமைச்சர் பதவி வழங்கச் சம்மதிப்பாரா? அல்லது தினகரனின் வருகையை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் முழுமனதோடு ஏற்பார்களா? போன்ற கேள்விகள் அரசியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளன. ஒருபுறம் “திமுகவை வீழ்த்தவே இந்தக் கூட்டணி” என தினகரன் முழங்கினாலும், மறுபுறம் “திமுகவுடன் மறைமுகக் கூட்டு வைத்து அதிமுகவை முழுமையாக வீழ்த்தியிருக்கலாம்” என்ற மாற்று ஆலோசனைகளும் அவர் கட்சிக்குள்ளேயே ஒலிக்கின்றன. எது எப்படியோ, தினகரனின் இந்த ‘யூ-டர்ன்’ அரசியல் முடிவு, வரும் தேர்தலில் தென் தமிழகத்தில் யாருக்குச் சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















