அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமைப் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை முழுமையாகக் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஆர். தர்மர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்ட போதே, ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி இடையே தர்மருக்காகத்தான் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவெடுத்ததாகக் கூறப்பட்டது. ஓபிஎஸ் பிடிவாதமாக நின்று தர்மருக்குப் பதவி பெற்றுத் தந்த நிலையில், இன்று அதே தர்மர் ஓபிஎஸ்-ஐத் துறந்து எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2022-ல் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவின் போது ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தர்மர் எம்.பி. மீது எடப்பாடி தரப்பு எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் நிதானம் காத்தது. இதனால், நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினராகவே அவர் நீடித்து வந்தார். இருப்பினும், கள யதார்த்தத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தர்மர், தற்போது தனது அரசியல் எதிர்காலத்தைக் கணக்கிட்டு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். வரும் 2028-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருப்பதால், அந்தப் பதவியைப் பாதுகாக்கவும், சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்க்கவும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையே சரியானது என அவர் கருதியதாகத் தெரிகிறது.
இந்த அரசியல் மாற்றம் குறித்து தர்மரின் ஆதரவாளர்கள் கூறுகையில், “அரசியல் எதிர்காலம் மற்றும் தொகுதிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, பலமான தலைமையுடன் இணைந்து செயல்படுவதே சிறந்தது எனத் தர்மர் முடிவெடுத்துள்ளார். ஓபிஎஸ் தரப்பின் தற்போதைய பலவீனம் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் நிலவும் தெளிவின்மை காரணமாக, தனது எம்.பி. பதவிக்கு எவ்வித இடையூறும் வராத வகையில் அவர் தாய் கழகத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்” எனத் தெரிவித்தனர். அதே நேரத்தில், இது குறித்துப் பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், “ஓபிஎஸ் பிடிவாதமாகப் போராடிப் பெற்றுத் தந்த பதவியை அனுபவித்துக் கொண்டே, அவருக்குத் துரோகம் இழைத்துவிட்டு எடப்பாடியிடம் தர்மர் சரணடைந்துள்ளார்” எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆர். தர்மரின் இந்த வருகை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒரு தார்மீக வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஒரு சமூகத்தைச் சேர்ந்த தர்மர், ஓபிஎஸ் முகாமிலிருந்து வெளியேறி அதிகாரப்பூர்வமான அதிமுகவில் இணைந்திருப்பது, தென் மண்டலத்தில் ஓபிஎஸ்-ன் பிடியைத் தளர்வடையச் செய்யும் ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், தர்மரின் இந்தத் தாவல் அதிமுகவின் உட்கட்சி அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

















