தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மரிக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் தென்னை மரங்களை அச்சுறுத்தி வரும் ‘சிவப்பு கூன் வண்டு’ எனப்படும் செம்பாம்பூச்சிகளின் (Red Palm Weevil) தாக்குதலால் தென்னை மரங்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்த அபாயகரமான பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தி, தென்னை விவசாயத்தைக் காக்கும் நோக்கில் ‘பெரோமோன் வலை’ (Pheromone Trap) குறித்த நேரடிச் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மரிக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. மதுரை விவசாயக் கல்லூரி மாணவி டான்யா, இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து ஆண்டிப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாணவி டான்யா, சிவப்பு கூன் வண்டுகளின் ஆபத்து குறித்துப் பேசுகையில், “இந்த வண்டுகள் தென்னை மரத்தின் தண்டுப் பகுதியினைத் துளைத்து உள்ளே புகுந்து திசுக்களைத் தின்று அழிக்கும் தன்மை கொண்டவை. மரத்தின் உள்ளே பாதிப்பு ஏற்பட்டாலும், வெளிப்புறத்திற்கு மரம் பசுமையாகத் தெரிவதால் விவசாயிகள் இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை. பாதிப்பு முற்றிய நிலையில் மரம் திடீரென உலர்ந்து சாய்ந்துவிடும். இதனால் விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இரசாயன மருந்துகளைத் தெளிப்பதை விட, இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்துவதே இதற்குச் சிறந்த தீர்வாகும்” என்று எச்சரித்தார்.
பெரோமோன் வலைகளின் சிறப்பம்சங்கள் குறித்து அவர் விளக்குகையில், இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையாகும். ஒரு பிளாஸ்டிக் வாளியின் உட்புறம் ‘பெரோமோன் லூர்’ (Pheromone Lure) எனப்படும் ஒரு மணப்பொருள் வைக்கப்பட்டிருக்கும். இந்த மணம் ஆண் மற்றும் பெண் சிவப்பு கூன் வண்டுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. வாளியின் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு உள்ளே வரும் வண்டுகள், அதில் உள்ள சோப்பு கலந்த நீரில் விழுந்து மடியும். ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு வெறும் 1 முதல் 2 பெரோமோன் வலைகளை வைப்பதன் மூலமே ஒட்டுமொத்தத் தோட்டத்தையும் இந்த வண்டுகளின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மரிக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற இந்தச் செயல் விளக்கத்தில், வலைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எத்தனை அடி உயரத்தில் தொங்கவிட வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதில் சிக்கிய பூச்சிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. தென்னை மரத்தின் குருத்துப் பகுதி அழுகுவதைத் தடுத்து, மரத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்க இந்த எளிய தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்று வேளாண் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற ஆண்டிப்பட்டி குழு விவசாயிகள், தங்களது தென்னைத் தோட்டங்களில் உடனடியாக இந்தப் பெரோமோன் வலைகளைப் பயன்படுத்த ஆர்வம் காட்டினர். இத்தகைய நவீன மற்றும் இயற்கை சார் நுட்பங்கள், தென்னை விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதோடு, பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களை அழிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















