அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனியை நோக்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் திருவிழா எவ்வித இடையூறுமின்றிச் சிறப்பாக நடைபெறவும், வரும் பக்தர்களின் நலன் வேண்டியும், பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரதுர்க்கை அம்மன் கோவிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பழனியின் பாரம்பரியமிக்க சித்தநாதன் சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆன்மீக நிகழ்வில், அதிகாலை முதலே வேத விற்பன்னர்கள் பங்கேற்று, லோகக்ஷேமத்திற்காகவும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சக்திவாய்ந்த மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகத்தை நடத்தினர்.
இந்தத் தைப்பூச முன்னெடுப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, வீரதுர்க்கை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி கலச பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு அம்மனுக்கு மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு, வீரதுர்க்கை அம்மன் விசேஷ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். யாக சாலையில் வளர்க்கப்பட்ட புனித நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு “அரோகரா” முழக்கத்துடன் அம்மனைத் தரிசனம் செய்தனர்.
இந்த விசேஷ வழிபாட்டு நிகழ்வில், சித்தநாதன் சன்ஸ் நிர்வாகிகளான எஸ்.ஜி. சிவனேசன், எஸ்.ஜி. தனசேகர், எஸ்.ஜி. பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மேலும், ஆலய அர்ச்சகர் செல்வ சுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் பேஸ்கார் ரேவதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், கோவில் ஊழியர்களும் இதில் பங்கேற்றுத் தைப்பூசப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். தைப்பூசத் திருவிழாவின் முன்னோட்டமாக நடைபெற்ற இந்தச் சிறப்பு யாகம், பழனிக்கு வரும் பக்தர்களிடையே பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாக் காலம் முழுவதும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகம் துரிதப்படுத்தி வரும் வேளையில், இந்தத் தெய்வீக வழிபாடு விழாவிற்கான மங்கலத் தொடக்கமாக அமைந்தது.

















