தமிழகம் முழுவதும் நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 35 ரயில்களுக்குக் கூடுதல் நிறுத்தங்களை வழங்க இந்திய ரயில்வே வாரியம் அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 29 விரைவு ரயில்களும், 6 பாசஞ்சர் ரயில்களும் அடங்கும். நீண்ட நாட்களாகப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த முக்கிய முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. குறிப்பாக, சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் ‘கோவை எக்ஸ்பிரஸ்’ மற்றும் சென்னை – பெங்களூரு ‘டபுள் டெக்கர்’ ரயில்கள் இனி திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்லும். இது சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து செல்லும் புறநகர் பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
மெட்ரோ ரயில் இணைப்பு உள்ள விம்கோ நகர் நிலையத்தில் சென்னை – விஜயவாடா ‘பினாகினி எக்ஸ்பிரஸ்’, ‘ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்’ மற்றும் பித்ரகுண்டா பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட உள்ளன. அதேபோல், சென்னை – ஜோலார்ப்பேட்டை விரைவு ரயில் இனி அம்பத்தூர் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – மும்பை சி.எஸ்.எம்.டி விரைவு ரயிலுக்கு அரக்கோணத்தில் புதிய நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் இனி பெரம்பூர் நிலையத்தில் நின்று செல்லும். இதன் மூலம் பயணிகள் சென்னை சென்ட்ரல் வரை செல்லாமல் பெரம்பூரிலேயே இறங்கித் தங்கள் இடங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும்.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி விரைவு ரயிலுக்கு கோவில்பட்டியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி – காச்சிகுடா மற்றும் செங்கல்பட்டு – காச்சிகுடா ரயில்களுக்கும் பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 29 விரைவு ரயில்களில் மெயில், அதிவிரைவு (Superfast) மற்றும் அந்த்யோதயா ரயில்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு – கன்னியாகுமரி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட தூர ரயில்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய நிறுத்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வ கால அட்டவணை மற்றும் செயல்படுத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தெற்கு ரயில்வேயால் வெளியிடப்பட உள்ளது. இம்மாற்றங்கள் தமிழகத்தின் போக்குவரத்து இணைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.













