திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆனால், இந்தத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தற்போது பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து, பழனி நகரமே பக்திப் பெருவெள்ளத்தில் மிதக்கிறது.
பழனியை இணைக்கும் பிரதான சாலைகளான மதுரை – பழனி சாலை, கோவை – பழனி சாலை மற்றும் தேனி – பழனி நெடுஞ்சாலைகளில் எங்கு நோக்கினும் காவி மற்றும் பச்சை உடை அணிந்த பக்தர்களின் கூட்டமே தென்படுகிறது. சிறிய அளவிலான மரத் தேர்களில் முருகப்பெருமானின் திருவுருவப் படங்களையும், சிலைகளையும் அலங்கரித்து வைத்து, பக்திப் பாடல்களைப் பாடியும், சிலம்பம் ஆடியும் குழுக்களாக வரும் பக்தர்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றனர். ‘அரோகரா’ முழக்கம் விண்ணை எட்ட, தோள்களில் காவடி சுமந்து பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து வரும் பக்தர்களின் உறுதி, தமிழர்களின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது.
பழனி மலைக்கோவிலின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ரோப் கார் நிலையம், மின் இழுவை ரயில் (Winch) நிலையம், படிப்பாதை மற்றும் யானைப் பாதை என அனைத்து வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பொது தரிசனப் பாதையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பக்தர்கள் தமிழ் கடவுள் முருகப்பெருமானைத் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினமான இன்று, குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டு வருவதால் மலைக்கோவில் மற்றும் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கின்றன.
பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், நிழற்பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும் போது இன்னும் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போதிலிருந்தே விரிவான முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.














