நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா ஒன்றில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அரசியல் குறித்துப் பேசியதற்கு விழாக்குழுவினர் மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு 11-வது வார்டு சின்னப்பாவடி பகுதியில், ‘சின்னப்பாவடி டெக்கரேஷன் கிளப்’ மற்றும் ‘அங்கு மெமோரியல் கிரிக்கெட் கிளப்’ ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளருமான அருண்ராஜ் அழைக்கப்பட்டிருந்தார்.
பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அருண்ராஜ், மேடையில் பேசத் தொடங்கியபோது தனது கட்சித் தலைவர் விஜய் குறித்தும், அவரை வருங்கால முதலமைச்சர் எனக் குறிப்பிட்டும் பேசினார். மேலும், பொதுமக்களிடம் “உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டதுடன், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அங்குள்ள கழிப்பிட வசதிகள் குறித்த அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பினார். ஒரு விளையாட்டு மற்றும் கலாச்சார விழாவில் அரசியல் உள்நோக்கத்துடன் கேள்விகள் கேட்கப்பட்டதால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட விழாக்குழு நிர்வாகி தனசேகர் என்பவர், அருண்ராஜின் பேச்சை இடையில் நிறுத்தி பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். “இது ஒரு பொதுவான பொங்கல் விழா, இங்கு அரசியலைப் பற்றிப் பேச வேண்டாம். பொங்கல் குறித்து மட்டும் பேசுங்கள்; உங்கள் அரசியல் கருத்துகளைப் பேச வேண்டுமானால் தனியாக மேடை போட்டுப் பேசிக் கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் தலைவர், இங்கு உங்கள் கட்சி அரசியலை அனுமதிக்க முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். விழாக்குழுவினரின் இந்த அதிரடி எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த அருண்ராஜ், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். பின்னர், “வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்” என்று மட்டும் கூறிவிட்டு உடனடியாக மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில், பொது மேடையில் அரசியல் பேசக்கூடாது என விழாக்குழுவினர் தடுத்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாக்களின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் பேசுவது முறையாகாது என ஒரு தரப்பினரும், மக்கள் குறைகளைத்தானே கேட்டார் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.














