தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கஸ்தூரி ரங்காபுரம் காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாகக் கழுகுமலை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர், மயங்கிக் கிடந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து கிடந்தது தெரியவரவே, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த உமா (19) என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தூத்துக்குடி மாவட்டம் பாறைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி, அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குத் தயாராகி வந்த மாணவி என்பதும் தெரியவந்தது.
மாணவி உமாவின் மரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பயிற்சி மையத்தில் தங்கிப் படித்த மாணவி, ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு எப்படி வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை அங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், அவரது செல்போன் எண்ணை வைத்தும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாணவியின் மரணச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். போட்டித் தேர்வுக்காகப் படித்து வந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, அப்பகுதியில் உள்ள மற்ற பயிற்சி மைய மாணவிகளிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.














