கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாகத் திகழும் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெறும் பாதைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். வரும் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்த்திருவிழாவிற்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இப்போதே அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஓசூர் மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் சபீர் ஆலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, தேர்ப்பேட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் மின்சாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தேரோட்டத்தின் போது, பிரம்மாண்டமான தேர் தடையின்றிச் செல்வதற்காகப் பாதுகாப்பு கருதி ஓசூர் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் திருவிழா சமயங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழிற்சாலைகள் சந்திக்கும் இன்னல்களைத் தவிர்க்கும் பொருட்டு, தேர்ப்பேட்டை வீதிகளில் உள்ள மேல்நிலை மின்சாரக் கம்பிகளை அகற்றிவிட்டு, அவற்றைப் பாதுகாப்பான முறையில் நிலத்தடியில் (Underground Cabling) கொண்டு செல்வது குறித்து மேயர் ஆய்வு செய்தார். இது தொடர்பாக மின்வாரியச் செயற்பொறியாளர் செந்தில் ராஜுடன் ஆலோசித்த மேயர், தேரோட்டப் பாதையில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்கவும், நிலத்தடி மின்வடப் பணிகளைத் திருவிழாவிற்கு முன்பே முடிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, தேரோடும் வீதிகளைச் சீரமைத்தல், குடிநீர் வசதி, தற்காலிகக் கழிப்பறை வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ். மாதேஸ்வரன், கிருஷ்ணவேணி ராஜி, பகுதிச் செயலாளர் ராமு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், வட்டச் செயலாளர் நாகராஜ் மற்றும் சு. முருகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும், பகுதி மாணவரணி அமைப்பாளர் ராகவன், ஹரிஷ், சரவணன் மற்றும் திரளான பொதுமக்கள் உடனிருந்தனர். மாநகராட்சியின் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கையினால், இந்த ஆண்டு ஓசூர் தேர்த்திருவிழா எவ்வித மின் தடையுமின்றி, நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் பாதுகாப்புடன் நடைபெறும் எனத் தேர்ப்பேட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

















