தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் காவல்துறை ஐஜி ஜே.சந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் விஜய் முன்னிலையில் சந்திரன் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அரசியலில் மாற்றத்தை விரும்பும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பலரும் தவெக-வை நோக்கி ஈர்க்கப்படுவதன் அடையாளமாக இந்த இணைப்பு பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம் என்பவரின் மகனான ஜே.சந்திரன், மிகச்சிறந்த கல்விப் பின்னணி மற்றும் நிர்வாகத் திறன் கொண்டவர். யூனியன் குரூப் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, புதுச்சேரி மாநிலத்தின் ஏஎஸ்பி-யாகத் தனது காவல்துறைப் பணியைத் தொடங்கிய இவர், பின்னர் பதவி உயர்வு பெற்று நான்கு ஆண்டுகள் எஸ்பி-யாகப் பணியாற்றினார். அவரது நேர்மையான பணிக்காக டிஐஜி-யாகப் பதவி உயர்வு பெற்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். மீண்டும் பதவி உயர்வின் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தின் ஐஜி-யாகப் பணியாற்றிய அவர், இறுதியாகத் தனது சொந்தப் பிராந்தியமான புதுச்சேரி மாநிலத்தின் ஐஜி-யாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பிறகு பா.ஜ.க-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சந்திரன், தற்போது விஜய்யின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தலைவர் விஜய்க்கு சந்திரன் சால்வை அணிவித்துக் கௌரவிக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக விஜய் அவருக்குச் சால்வை அணிவித்துத் தவெக குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்றார். இந்த நிகழ்வின் போது புதுச்சேரி மாநிலத்தின் ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி தவெக தலைவர் பிரதீப் உடனிருந்தார். நீண்ட கால நிர்வாக அனுபவம் கொண்ட முன்னாள் ஐஜி சந்திரனின் வருகை, புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என அக்கட்சியினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.














