தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியான வசந்தம் நகர் குடியிருப்போர், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நரக வேதனையை அனுபவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தேனி நகரின் விரிவாக்கப் பகுதியாகக் கருதப்படும் இங்கு, அரசு அலுவலர்கள் மற்றும் தொழில்முனைவோர் எனப் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் குடியிருப்புகள் உருவான போதிலும், இதுவரை முறையான சாலை வசதியோ அல்லது சாக்கடை வசதியோ செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் வீட்டு வரி மற்றும் இதர வரிகளை வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் காட்டுவதில்லை என்பதே இவர்களின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.
வசந்தம் நகரில் வசிக்கும் சுபா, அமராவதி, கஸ்தூரி உள்ளிட்ட குடியிருப்போர் தங்களது குறைகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். மழைக்காலங்களில் மண் சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது. சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, குழந்தைகளும் முதியவர்களும் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள ஐந்து மின்கம்பங்களிலும் தெருவிளக்குகள் எரியாததால், இரவு 7:00 மணிக்குப் பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இருளைப் பயன்படுத்திப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, திருட்டு பயமும் குடியிருப்போரை ஆட்கொண்டுள்ளது.
அடிப்படைத் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாக ஊராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தும், “தற்போது நிதி இல்லை” என்ற ஒரே பதிலையே அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் தபால் மற்றும் கொரியர் சேவைகள் கூடக் குடியிருப்புகளுக்கு நேரடியாக வருவதில்லை. ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ. தொலைவிலுள்ள மணி நகருக்கு, உயிரைப் பணயம் வைத்து மெயின் ரோட்டைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தெருநாய்களின் தொல்லையும் இப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணிக்கும் ஊராட்சி நிர்வாகம், உடனடியாகச் சாலை, சாக்கடை மற்றும் தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வசந்தம் நகர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















