பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து ஏழாம் திருநாளான நேற்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் ‘கைத்தல சேவை’ சாதித்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகத் திகழும் ஸ்ரீரங்கத்தில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் நிறைவாக நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்ததைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு கடந்த 30-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான நேற்று (ஜனவரி 5), விழாவின் முக்கிய வைபவங்களில் ஒன்றான ‘கைத்தல சேவை’ நடைபெற்றது. இதையொட்டி, மாலை 3 மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து ரத்தின அங்கி அணிந்து புறப்பட்ட நம்பெருமாள், மேளதாளங்கள் முழங்க சொர்க்கவாசலைக் கடந்து சென்றார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை மாலை 5:45 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு, அர்ச்சகர்கள் நம்பெருமாளைத் தங்கள் கரங்களில் ஏந்தி, முன்னும் பின்னும் அசைந்தபடி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் ‘கைத்தல சேவை’ நடைபெற்றது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சாரதியாக இருந்து வழிநடத்தியதை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்தச் சேவையைத் தரிசிக்க, உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவு 11:30 மணி அளவில் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், ஆழ்வார்களுடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று (ஜனவரி 6), புகழ்பெற்ற ‘திருமங்கை மன்னன் வேடுபறி’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறைவனையே வழிப்பறி செய்ய வந்த திருமங்கை மன்னன், பின்னாளில் ஆழ்வாராக மாறிய புராண நிகழ்வை விளக்கும் இந்த உற்சவம் ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரபலம். இன்று மாலை நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மணல் வெளியில் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.














