பெற்ற மகனே எங்களைக் கொல்லத் துடிக்கிறான்; நிம்மதியாக உயிர்வாழ வழிவகை செய்யுங்கள்” என்று மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறியபடி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 80-க்கும் மேல்). இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி பாப்பா, ஓய்வுபெற்ற செவிலியர். அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்த முதிய தம்பதியினருக்கு, முதுமைக் காலத்தில் நிம்மதிக்கு பதிலாகத் துயரமே மிஞ்சியுள்ளது. இவர்களது மகன், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு முழுமையாக அடிமையாகி, அன்றாடம் தனது பெற்றோரை நரக வேதனைக்கு உள்ளாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் அளித்த மனுவில் உள்ள விவரங்கள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளன. போதைக்கு அடிமையான மகன், தினமும் மது அருந்திவிட்டு வந்து வயதான தந்தை என்றும் பாராமல் தன்னிச்சையாகத் தாக்குவதும், தாயார் முன்னிலையில் மிக அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் உள்ள பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்துவதுடன், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மிரட்டுவதையே முழுநேரத் தொழிலாக வைத்துள்ளார். பணம் தர மறுத்தால் “உங்களைக் கொன்றுவிடுவேன்” என்று கத்தியைக் காட்டி மிரட்டுவதாகவும், இதனால் ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்ந்து வருவதாகவும் அத்தம்பதி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
மகனைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இதுவரை நான்கு முறை பல்வேறு போதை மறுவாழ்வு மையங்களில் சேர்த்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. மையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறார். இதுகுறித்து சமயநல்லூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், குடும்பப் பிரச்சினை என்று கூறி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தம்பதியினர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையினரின் அலட்சியத்தால், தற்போது தங்களது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம் என்பதால், ஆட்சியரின் நேரடித் தலையீட்டை அவர்கள் கோரியுள்ளனர்.
இவர்களுக்கு உதவி வரும் சமூக ஆர்வலர் போதிலெட்சுமி கூறுகையில், “தமிழகத்தில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதுடன் தங்களைப் பெற்றவர்களையே சித்திரவதை செய்கின்றனர். இந்த தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாகத் தலையிட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைத்து இடங்களிலும் மனு அளித்துள்ள இந்த முதியவர்களின் கதறல், சமூகத்தில் சிதைந்து வரும் குடும்ப உறவுகளையும் போதை அரக்கனின் கோர முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.













