தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அரசு நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் விரைவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். முதலமைச்சரின் இந்த வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர் வருகையின் போது விழா மேடை அமைத்தல், பயனாளிகள் வருகை, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால், ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அதிகாரிகளுக்குத் தனித்தனியாக இலக்குகளை நிர்ணயித்தார். குறிப்பாக, விழா நடைபெறும் இடத்தில் குடிநீர், தற்காலிகக் கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகளைத் தங்குதடையின்றி உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆலோசனைகளை வழங்கினார். விழா நடைபெறும் பகுதி மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பயிற்சி உதவி ஆட்சியர் வினோதினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) கீர்த்தனா மணி ஆகியோர் நிர்வாக ரீதியான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவிகள் மற்றும் ஊரகத் துறை சார்ந்த திட்டப் பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். முதலமைச்சரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது.

















