தேனி மாவட்டம் போடி மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால், போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநில மலைப்பகுதிகள் மற்றும் போடி நகரை ஒட்டியுள்ள குரங்கணி, கொட்டகுடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று காலை 9:00 மணி வரை நீடித்தது. இந்த இடைவிடாத மழையினால் மலைப்பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் கொட்டகுடி ஆற்றில் சங்கமித்ததால், போடி அருகே முந்தல் சாலையில் அமைந்துள்ள அணைப்பிள்ளையார் அணை தனது முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் அணையைத் தாண்டி அருவியைப் போல ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இந்த திடீர் நீர்வரத்து போடி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைப்பிள்ளையார் அணையில் இருந்து வெளியேறும் நீர், போடியின் முக்கிய நீர் ஆதாரங்களான பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் மற்றும் புதுக்குளம் கண்மாய்களுக்குச் சீராகச் சென்றடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, வரவிருக்கும் சாகுபடிக்குத் தட்டுப்பாடின்றித் தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கண்மாய்களுக்குச் செல்லும் வரத்து வாய்க்கால்களைப் பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பிள்ளையார் அணைப் பகுதியில் நீர் வேகம் அதிகமாக இருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ போடி காவல்துறையினர் கடும் தடை விதித்துள்ளனர். போடி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த அணைப் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், ஆற்றில் எந்நேரமும் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரங்களுக்குச் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.














