உலகப்புகழ் பெற்ற பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவைக் முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, காவடிகள் ஏந்தி பழநி நோக்கி நடைபயணமாக வரத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக தைப்பொங்கலுக்குப் பின்னரே கூட்டம் அதிகரிக்கும் என்ற நிலையில், இந்த ஆண்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பொங்கலுக்கு முன்பாகவே பக்தர்கள் கணிசமான அளவில் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும் இந்த பக்தர்களுக்கு ஆண்டுதோறும் கோயில் நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிழற்பந்தல்கள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே வரத் தொடங்கியுள்ள பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்து தரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், ரெட்டியார்சத்திரம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் இடமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குழந்தை வேலப்பர் கோயில் வெளிப்புற நடைபாதையில் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதோடு, நாற்காலிகள் மற்றும் பிற பொருட்களைப் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இரவு நேரங்களில் நடைபாதையில் முளைத்துள்ள செடி கொடிகளால் பக்தர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மின்விளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லாததால், பக்தர்கள் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது; இது விபத்து அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் இணைந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் போர்க்கால அடிப்படையில் தற்காலிக குளியலறை, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையைச் சீரமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














