தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், புதிய முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் வரும் ஜனவரி 7-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் இந்த முக்கியப் பயணத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் அமரும் மேடையின் கட்டமைப்பு, விழா பந்தலின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் வசதியாக அமர்ந்து நிகழ்ச்சியைக் காண செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், முதலமைச்சரின் வாகனம் விழா மேடைக்கு வரும் பாதை, முக்கியப் பிரமுகர்களுக்கான நுழைவு வாயில் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். விழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்குக் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் ஆலோசித்த அமைச்சர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பழநி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) ஜெயபாரதி ஆகியோர் உடனிருந்தனர். மேலும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீர்த்தனா மணி மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கவேல் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்று, தொழில்நுட்ப ரீதியான விளக்கங்களை வழங்கினர். முதலமைச்சரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

















