புதுச்சேரி மெரினா கடற்கரையில் தடையை மீறி பாறைகள் மீது ஏறி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த சென்னை பெண் பேராசிரியை, பாறை இடுக்கில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடிய அவரை, தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் கிரேன் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி (26) என்பவர் சென்னையில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வார விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த அவர், நேற்று மாலை 5:30 மணியளவில் பாண்டி மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்குள்ள கடல் அரிப்பு தடுப்புப் பாறைகளின் மீது நின்று அலைகளின் பின்னணியில் செல்போனில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளார். அப்போது ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்குத் தாவ முயன்றபோது, நிலைதடுமாறி இரண்டு பிரம்மாண்ட பாறைகளின் இடுக்கில் தவறி விழுந்தார். அவர் விழுந்த வேகத்தில் ஒரு பெரிய பாறை சரிந்து அவரது காலின் மீது விழுந்ததில், அவர் அங்கிருந்து நகர முடியாமல் சிக்கிக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் அவரை மீட்க முயன்றனர். ஆனால் பாறை மிகப் பெரிய அளவில் இருந்ததால் மனித சக்தியால் அதனை அசைக்க முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை. இறுதியில் கனரக கிரேன் இயந்திரம் மூலம் பாறையை நகர்த்த முடிவு செய்யப்பட்டது.
இரவு 7:50 மணியளவில் சம்பவ இடத்திற்கு கிரேன் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், மணற்பாங்கான கடற்கரை மற்றும் அடுக்கப்பட்டிருந்த பாறைகளால் கிரேன் இயந்திரம் விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து, பாறைகளைச் சீரமைத்து கிரேனுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பின்னர் இரவு 8:00 மணியளவில் கிரேன் மூலம் பாறை லேசாகத் தூக்கப்பட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வைஷ்ணவி பத்திரமாக மீட்கப்பட்டார்.
நீண்ட நேரம் பாறையின் எடையைச் சுமந்ததால் வைஷ்ணவியின் கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. முதலுதவிக்குப் பின் போலீசார் அவரை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மெரினா கடற்கரையின் இந்தப் பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் பாறைகள் மீது ஏறவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. “தடையை மீறிப் பேராசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுப்பது இதுபோன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.















