தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வலது கரையை நிரந்தரமாகச் சீரமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று செய்தியாளர்களுடன் நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத அதிகனமழையினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரைகள், குளங்கள் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் பெரும் உடைப்புகள் ஏற்பட்டன. அந்த இக்கட்டான சூழலில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முதற்கட்டமாக தற்காலிகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகத் தண்ணீரை முறைப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உலக வங்கிக் குழு மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் கண்காணிப்பில் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவைகுண்டம் முதல் ஏரல் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நிரந்தர ஆற்றுக்கரை சீரமைப்புப் பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் கரைகளில் லேசான மண் அரிப்பு ஏற்பட்டது. குறிப்பாக திருச்செந்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட மண் சரிவினை அதிகாரிகள் உடனடியாகச் சீரமைத்தனர். இன்றைய ஆய்வின் போது, ஏரல் வட்டம் உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட ஆலடியூர் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் இடது கரைப் பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அப்பகுதி பொதுமக்கள், ஆடு, மாடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கரையின் தாழ்வான பகுதிகள் மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவித்து, அந்த இடங்களை உயர்த்தி பலப்படுத்தித் தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்த ஆட்சியர், ஸ்ரீவைகுண்டம் முதல் ஏரல் வரையிலான பகுதிகளில் மழை நீரால் அரிப்பு ஏற்பட்டுள்ள கரைகளை மண் மற்றும் தாவரங்கள் மூலம் இயற்கை முறையில் (Bio-fencing) பலப்படுத்த உத்தரவிட்டார்.
தாமிரபரணி ஆற்றின் கரைகள் பலவீனமாக உள்ள இடங்களை முறையாகக் கண்டறிந்து, அவற்றை உயர்த்தி பலப்படுத்தும் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, ஆற்றின் கரைகளில் இயற்கையான முறையில் மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்களை நடுவது குறித்தும், மழைநீர் வழிந்தோடும் பாதைகளைச் சீரமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் பருவமழை காலங்களில் ஆற்று நீர் ஊருக்குள் புகாத வண்ணம் கரைகளின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தச் செய்தியாளர் பயணத்தின் போது, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஏரல் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்து விளக்கமளித்தனர்.















