திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள காளிப்பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை உள்நாட்டிலேயே பெற்றுத் தரும் உயரிய நோக்கில் இந்த முகாம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஸ்டாலின் குமார் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி 32 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான தகுதியுள்ள பணியாளர்களைத் தேர்வு செய்தன. இதில் துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, உப்பிலியபுரம், தாத்தையங்கார்பேட்டை மற்றும் தொட்டியம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நேர்காணல் மூலம் தகுதியான நபர்களைத் தேர்வு செய்த நிறுவனங்கள், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கின. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநரும் திட்ட இயக்குநருமான சுரேஷ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், படித்த இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு இத்தகைய முகாம்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்றும், அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக இத்திட்டம் செயல்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் துறையூர் ஒன்றியச் செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ. சரவணன் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமினை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மிகச்சிறந்த முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். மேலும், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் வட்டாரப் பணியாளர்கள் முகாமிற்கு வந்திருந்த இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் திருச்சி மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நன்றி கூற, முகாம் இனிதே நிறைவுற்றது. இத்தகைய முகாம்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் குறைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.















