பொள்ளாச்சி பகுதியில் மொழி மற்றும் இலக்கியத்தை வளர்க்கும் நோக்கில், ‘பொள்ளாச்சி இலக்கிய வட்டம்’ சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் இலக்கியக் கூடல், இம்மாதம் புதிய நூல்கள் வெளியீடு மற்றும் படைப்பு அனுபவ உரையாடல் விழாவாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சபிரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை பலரும் திரளாகப் பங்கேற்றுத் தங்களது படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மலையாள இலக்கியத்தின் செழுமையை எடுத்துரைக்கும் வகையில், எழுத்தாளர் சண்முகதாஸ் எழுதி, முனைவர் பாத்திமா தமிழில் மொழிபெயர்த்த ‘கடலாழங்கள்’ நூல் வெளியிடப்பட்டது. இதனை எழுத்தாளர் சிவக்குமார் வெளியிட்டு அறிமுகப்படுத்த, மலையாள எழுத்தாளர் பிரேம்தாஸ் முதற்படியைப் பெற்றுக் கொண்டார். பிறமொழி இலக்கியங்கள் தமிழுக்கு வருவதன் மூலம் இரு மாநில கலாசார உறவுகள் மேம்படும் எனப் படைப்பாளிகள் சண்முகதாஸ் மற்றும் பாத்திமா தங்களது ஏற்புரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, கவிஞர் ஆனந்தபிரபுவின் ‘நான்மாடக்கூடல்’ கவிதை நூலை கவிஞர் சிவக்குமார் வெளியிட, அஸ்வின் பிரபு பெற்றுக் கொண்டார். இந்நூலின் நுட்பமான கவிதை வரிகளை கவிஞர் சுடர்விழி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.
இலக்கிய வட்டத்தின் தனித்துவமான ‘ரசனைப்பிரிவு’ நிகழ்வு கவிஞர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் தற்கால இலக்கியப் போக்குகள் குறித்து கவிஞர்கள் கார்த்திகா, ஜனனி, யாழினி, தன்யா மற்றும் ஹரிப்பிரியா ஆகியோர் தாங்கள் வாசித்த நூல்களிலிருந்து தங்களைக் கவர்ந்த பகுதிகளை ரசனை அனுபவங்களாகப் பகிர்ந்து கொண்டனர். இது போன்ற நிகழ்வுகள் இளம் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் எனப் பாராட்டப்பட்டது. மேலும், எழுத்தாளர் மூர்த்தி எழுதிய ‘மோனோலாக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் நிழலி அறிமுகம் செய்ய, பேராசிரியர் மூர்த்தி தனது படைப்புப் பயணத்தின் சவால்கள் குறித்துப் உரையாற்றினார்.
நிகழ்வின் நிறைவாக, படைப்பாளிகள் பங்கேற்ற கவியரங்கம் மற்றும் ‘படித்ததில் பிடித்தது’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் வாசகர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டனர். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இத்தகைய செயல்பாடுகள், நகரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். முன்னதாகச் செயலாளர் பூபாலன் முன்னிலை வகிக்க, கவிஞர் சோலைமாயவன் வரவேற்றார். கவிஞர் ஜெயக்குமார் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
















