அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும் நூலகங்கள், பொள்ளாச்சி பகுதியில் போதிய பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் இன்றி முடங்கிக் கிடப்பது புத்தக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நூலகத்துறையின் கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு முதல் நிலை நூலகம், 3 முழுநேர கிளை நூலகங்கள், 17 கிளை நூலகங்கள் மற்றும் பல ஊர்ப்புற நூலகங்கள் அடங்கும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த நூலகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்படாமல் இன்னும் பழைய நிலையிலேயே நீடிக்கின்றன.
குறிப்பாக, கிணத்துக்கடவு பகுதி தாலுகாவாகத் தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், அங்குள்ள கிளை நூலகம் முழுநேர நூலகமாக மாற்றப்படவில்லை. இதேபோல் தொண்டாமுத்தூர், ஜமீன் கோட்டாம்பட்டி, சின்னாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பகுதிநேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாகவும்; ஆவல்சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி போன்ற ஊர்ப்புற நூலகங்களைக் கிளை நூலகங்களாகவும் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது. காடம்பாறை, சுப்பேகவுண்டன்புதூர் உள்ளிட்ட கிளை நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக இருப்பது நிர்வாகச் சீர்கேட்டிற்குச் சான்றாக உள்ளது.
நகரம் மற்றும் மக்கள் தொகை பெருகினாலும், நூலகங்களின் எண்ணிக்கை மற்றும் தரம் வளராதது கிராமப்புற மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 118 ஊராட்சிகளைக் கொண்ட இப்பகுதியில் பல கிராமங்களில் இன்னும் நூலகங்களே இல்லை. இதனால், கிராமப்புற மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் புத்தகங்களைத் தேடிப் பொள்ளாச்சி அல்லது கோவைக்கு அலைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அண்டை பகுதியான உடுமலையில் நூலகத்தை ‘டிஜிட்டல் நூலகமாக’ மாற்ற அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி மட்டும் புறக்கணிக்கப்படுவது ஏன் என நூலக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து நூலக ஆர்வலர் லெனின் பாரதி கூறுகையில், “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பயன்பாடின்றி உள்ள நூலகங்களைப் பொது நூலகத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அவை முழுமையான செயல்பாட்டுக்கு வரும். மேலும், கிளை நூலகங்களின் வேலை நேரத்தைக் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும். அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பொள்ளாச்சி பகுதியில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். நவீன உலகிற்கு ஏற்ப இணையதள வசதி, போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் நூலகங்களை மேம்படுத்தினால் மட்டுமே மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உண்மையான வழிகாட்டியாக அவை அமையும்.
















