ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோயில் வளாகத்தில், விதிகளை மீறி அரசியல் பதாகை ஏந்தி வீடியோ வெளியிட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மதுரை கஜமுருகன் (அதிமுக பேச்சாளர்) மற்றும் திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அதிமுக மாணவரணி செயலாளர் பாலமுருகன் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு கோயில் வளாகத்தின் முன்பாக, ‘ஏழுமலையான் ஆசியுடன் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரைப் பிடித்தவாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
புனிதத்தலமான திருப்பதி திருமலை வளாகத்திற்குள் எவ்வித அரசியல் நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது என்பது மிகக்கடுமையான விதிமுறையாக உள்ளது. இந்நிலையில், இந்த விதிகளைப் பொருட்படுத்தாமல் அரசியல் உள்நோக்குடன் செயல்பட்டதாகக் கூறி, திருப்பதி திருமலை டவுன் (1) காவல்துறையினர் கஜமுருகன் மற்றும் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “நாங்கள் அப்பாவிகள் என்றும், பக்தி நோக்கிலேயே அச்செயலைச் செய்ததாகவும், வழக்கில் தவறாகத் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்” என்றும் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜோதிராமன், மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டறிந்த பின், இருவருக்கும் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் உரிய ஜாமின் உத்தரவாதங்களைத் தாக்கல் செய்து, முறைப்படி முன்ஜாமின் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். புனிதத் தலங்களில் அரசியல் பரப்புரை செய்வது விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பிற மாநிலக் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த நிவாரணம் குறித்த சட்ட நுணுக்கங்கள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
















