மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று எழுச்சிமிகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சமீபகாலமாக அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள் மற்றும் கட்சிப் பிளவு குறித்து அவதூறு பரப்புபவர்களைக் கடுமையாகச் சாடிப் பேசினார். அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் வெளியேறியதைச் சுட்டிக்காட்டி, கட்சி பலவீனமடைந்து விட்டதாகப் பரப்பப்படும் செய்திகளை முற்றிலுமாக மறுத்த அவர், அதிமுக என்பது தலைவர்களால் உருவானது அல்ல, லட்சக்கணக்கான தொண்டர்களின் ரத்தத்தாலும் உழைப்பாலும் உருவான இயக்கம் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்தார். குறிப்பாக, அதிமுகவிலிருந்து அண்மையில் வெளியேறிய கே.ஏ. செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகளின் பெயரைக் குறிப்பிடாமல், “இன்னும் பலர் வருவார்கள் என்று கூறி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன, ஆனால் உங்கள் நிழல் கூட எங்கும் நகரவில்லை” என விமர்சித்ததோடு, கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் மீண்டும் அதிமுகவைச் சிதைக்க முயல்வது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், கழகத்தின் உயரிய பொறுப்புகளிலும் இருந்தவர்கள், இன்று அந்தக் கட்சிக்கு எதிராகவே செயல்படுவது அறமல்ல என்றும், நீங்கள் இல்லையென்றால் அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பது அறியாமை என்றும் சாடினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகளின் செல்வாக்காலும், கொடி பிடிக்கும் கடைக்கோடி தொண்டனின் உழைப்பாலுமே இன்றுவரை பலரும் அதிகாரப் பதவிகளை அனுபவித்ததை அவர் நினைவுபடுத்தினார். “டிவியைத் திறந்தாலே அதிமுகவைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாத அளவு தவறான கருத்துகளைப் பேசுவது வேதனையளிக்கிறது; இது நெஞ்சுவலியைத் தருகிறது” என்று குறிப்பிட்ட அவர், அதிமுக என்பது 3 ஆகவோ அல்லது 5 ஆகவோ பிளவுபடவில்லை, அது ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டர்களின் கட்சியாக வலிமையுடன் இருக்கிறது என்று உறுதிபடத் தெரிவித்தார். இறுதியாக, கட்சியிலிருந்து போனவர்கள் போன இடத்திலேயே அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் அதிமுகவைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது பலவீனப்படுத்தவோ நினைத்தால், கடைசித் தொண்டன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.















