பொள்ளாச்சி நகரின் மையப்பகுதிகளில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடியைக் குறைக்க, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 33.57 கோடி ரூபாய் இழப்பீடாகவும், சாலைப் பணிகளுக்காக 34.61 கோடி ரூபாயும் என மொத்தம் சுமார் 68 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது. குறிப்பாக மரப்பேட்டை, தேர்நிலையம், தலைமை தபால் நிலையம், காந்தி சிலை மற்றும் பேருந்து நிலையச் சந்திப்பு ஆகிய முக்கியப் பகுதிகளில் வாகனங்கள் சீராகச் சென்று வர ரவுண்டானாக்கள் (சுற்றுவட்டப் பாதைகள்) அமைக்கப்பட்டன. ஆனால், இவ்வளவு பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரவுண்டானாக்கள், தற்போது நெரிசலைத் தீர்ப்பதற்குப் பதிலாக நெரிசலை அதிகப்படுத்தும் இடங்களாக மாறியுள்ளன.
ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலிருந்தும் வரும் வாகனங்கள் ரவுண்டானாவைச் சுற்ற முற்படும்போது, போக்குவரத்து ஒழுங்குமுறையில் சிக்கல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு முக்கியச் சந்திப்பில் ஏற்படும் பாதிப்பு, சங்கிலித் தொடர் போல ஒட்டுமொத்த நகரத்தின் பிற சாலைகளையும் ஸ்தம்பிக்கச் செய்கிறது. குறிப்பாக அரசு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிப்பதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் முறையற்ற வாகன நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புகளால் திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிட்டது. அவசரத் தேவைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வழி கிடைக்காமல் திணறும் சூழல் நிலவுகிறது. விதிமுறை மீறி சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்தனர்.
நகரின் போக்குவரத்துப் பிரச்சினையைச் சீர்செய்ய ரவுண்டானாக்கள் மட்டும் போதாது என்றும், தேவையுள்ள இடங்களில் தானியங்கி சிக்னல்களை நிறுவுவது அல்லது மேம்பாலத் திட்டங்களை ஆய்வு செய்வது மட்டுமே நீண்டகாலத் தீர்வாக அமையும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்வர வேண்டும் என்பதே பொள்ளாச்சி நகர மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

















