சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு அலுவலகக் கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து வருவது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான அரசு கட்டடங்கள் தற்போது பயன்பாடின்றி வீணாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சிப் பகுதியில் ஒரு சில கட்டடங்கள் சீரமைக்கப்பட்டாலும், பெரும்பாலான அலுவலகங்களில் மேற்கூரை பூச்சுகள் உதிர்ந்து விழுவதால், அங்குப் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எந்நேரமும் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற உயிர் அச்சத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.
கிராமப்புற மேம்பாட்டிற்காகக் கட்டப்பட்ட மண்புழு உரக்கூடங்கள் மற்றும் குப்பை பிரிப்பு மையங்கள் ஒரு நாள் கூட முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் தற்போது புதர்மண்டி கிடக்கின்றன. ஊராட்சிகள் தோறும் கட்டப்பட்ட கிராமத் தகவல் மையங்கள், தேவையான கணினி மற்றும் இதர உபகரணங்கள் இன்றி வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. முரண்பாடாக, இருக்கும் கட்டடங்களே பாழடைந்து கிடக்கும் நிலையில், அதே பகுதிகளில் ‘கிராம சேவை மையங்கள்’ என்ற பெயரில் மீண்டும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பல சமுதாயக் கூடங்கள், தற்போது சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைக்கும் குடோன்களாக உருமாறி வருகின்றன.
தேவகோட்டை அருகே உள்ள காரை கிராமத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் ஒன்று மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது; மற்றவை சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகின்றன. செய்யானேந்தல் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேராட்டுகோட்டை பகுதியில் முறையான திட்டமிடல் இன்றி கண்மாய்க்குள் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், எப்போதும் நீர் சூழ்ந்தே காணப்படுவதால் நோயாளிகள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. கண்ணங்குடியில் வட்டாரக் கல்வி அலுவலகம் இயங்கி வந்த பழைய பள்ளிக் கட்டடம் தற்போது முற்றிலும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது.
பல அரசுத் துறைகள் தங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் இன்றி வாடகைக் கட்டடங்களில் தவித்து வரும் வேளையில், ஏற்கனவே கட்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழாவது வேதனைக்குரியது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஒன்றியங்களில் உள்ள சிதிலமடைந்த கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றைச் சீரமைக்க வேண்டும். மேலும், பயன்பாடின்றி இருக்கும் கட்டடங்களை உரியத் துறைகளிடம் ஒப்படைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















