தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் பணிப் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள போர்டிகோ பகுதியில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
நேற்று இந்தப் போராட்டம் நான்காவது நாளாக நீடித்தது. போராட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற செவிலியர்கள், கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக, பல ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற அடிப்படையில் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய தங்களுக்கு, அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகப் போராட்டக் குழுவினர் வேதனை தெரிவித்தனர். “குறைந்த ஊதியத்தில் அதிக பணிச்சுமையுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்,” என ஒருங்கிணைப்பாளர் சவுமியா உறுதியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து நான்கு நாட்களாகச் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டு, மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நோயாளிகளின் நலன் கருதியும், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்தும் தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் சுமுகத் தீர்வு காண வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் போராட்டக் களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தாதது செவிலியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

















