பெங்களூருவில் இருந்து ஷிவமொக்கா வழியாக, கோகர்ணா என்ற நகரத்திற்கு, தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்தில், 32 பேர் பயணம் செய்தனர். அதிகாலை 3 மணியளவில், சித்ரதுர்கா மாவட்டம் கோர்லத்து என்ற இடத்தில், பேருந்து, எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. அப்போது, பேருந்து தீப்பற்றிக் கொண்டது.
அடுத்த சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், தீ விபத்தில் 11 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர், விபத்து நிகழ்ந்த உடன் கீழே குதித்து உயிர் தப்பிவிட்டனர். ஆனால், லாரி ஓட்டுனரும், அவரது உதவியாளரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சில பயணிகள் காயம் அடைந்து, தும்கூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

















