திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மற்றும் முதியோர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகச் சிறப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மொட்டனம்பட்டி ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள பாசத்தோட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் சைலேந்திர ராய் தலைமை தாங்கினார். ஆசிரியர் சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பாதிரியார்கள் சைமன், பெலிக்ஸ் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கினர். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் பங்கேற்று, காப்பகக் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குப் புத்தாடைகள், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பாராட்டினர்.
பண்டிகைக் காலங்களில் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதே உண்மையான கொண்டாட்டம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய அங்கமாக நடிகை பூவிதாவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதியோர்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மண்டலத் தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி கவுன்சிலர்கள் வசந்தி, விமலா ஆரோக்கியமேரி, தெரசாள்மேரி, மார்த்தாண்டன் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முருகானந்தம், செபஸ்தியார், வில்லியம், லியோ, குழந்தைவேல், பிச்சை பீட்டர், யாகப்பன், ராமச்சந்திரன், மணிகண்டன் உட்படப் பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

















