திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளைத் தவிர்த்து, நகருக்குள் நுழையும் பிரதான சாலைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் ஒட்டுமொத்தப் பகுதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மாநகரை இணைக்கும் மதுரை சாலை, திருச்சி சாலை மற்றும் வத்தலகுண்டு சாலை என அனைத்து நுழைவு வாயில்களும் போதிய வெளிச்சமின்றி காட்சியளிக்கின்றன.
இதில் மதுரை சாலையில் சவேரியார்பாளையம் முதல் தோமையார்புரம் வரையிலான சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தெருவிளக்குகளே இல்லாத சூழல் நிலவுகிறது. இதேபோல், திருச்சி சாலையில் ஆயுதப்படை மைதானம் முதல் நேருஜி நகர் மேம்பாலம் வரை நிலவும் கடும் இருள் காரணமாக, இரவு நேரங்களில் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் குடியிருப்பு வாசிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சியை ஒட்டியுள்ள சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி போன்ற வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த இருளைச் சாதகமாகப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதால், இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். மேலும், சாலை ஓரங்கள் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதோடு, போதிய வெளிச்சமின்மையால் மேடு பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கையில், இருள் சூழ்ந்த பகுதிகளில் மர்ம நபர்கள் இறைச்சிக் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டிச் செல்வதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, வெளியூரிலிருந்து வருபவர்கள் மத்தியில் திண்டுக்கல் நகரைப் பற்றிய அவப்பெயர் உருவாகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, விபத்துகளையும் குற்றச் சம்பவங்களையும் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து, போதிய மின்விளக்குகளை அமைப்பதோடு, முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

















