எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க. மட்டுமே இணைப்பு என ஓ.பி.எஸ். ஆதரவு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சியை இணைக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அ.தி.மு.க. என்ற பூ மாலை குரங்கு கையில் சிக்கியுள்ளதாகவும், தற்குறியான எடப்பாடி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என்றும் வைத்தியலிங்கம் தெரிவித்தார். பின்னர் பேசிய ஓ.பி.எஸ். தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம்புகட்ட வேண்டும் என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஓ.பி.எஸ். கூறினார்.
















