கன்னியாகுமரி :
திருப்பரங்குன்றத்தை மையமாக கொண்டு பாஜக மதவெறி அரசியலை வளர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டு மக்களும் உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வட்டாரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை மதவாத கட்சி என்று கூறுவது நகைப்புக்குரியது என்றும் விமர்சித்தார். மதவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், அதற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளை மதவாதம் என குற்றம்சாட்டுவது வேடிக்கையானது என அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்துக்களை புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என கூறினார். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இந்த கூட்டணி குரல் கொடுத்து வருவதாகவும், அதனால்தான் தொடர்ந்து தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று வருவதாகவும் விளக்கினார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெற முடியாது என்றும், இந்து சமூகத்தை சேர்ந்த மக்களும் பெரும்பான்மையாக இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் திருமாவளவன் கூறினார். “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்பது ஜனநாயக முழக்கமே தவிர, யாருக்கும் எதிரானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

















