தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தமிழக பா.ஜ., விவசாய அணியினர் டில்லியில் நேரில் சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அமைச்சரைச் சந்தித்த குழுவினர், தமிழகத்தில் நெல் பாதுகாப்பு மற்றும் உழவு இயந்திரப் பயன்பாட்டில் ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளை விரிவாகப் பட்டியலிட்டனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 லட்சம் டன் நெல் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் வீணாகியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். நெல்லைப் பாதுகாப்பதற்கான நவீனக் கிடங்குகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு போதுமான நிதியுதவி வழங்கியும், தமிழக அரசு அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றார். “மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே போனது? கிடங்குகள் ஏன் கட்டப்படவில்லை? என்பது குறித்து மத்திய அதிகாரிகளை அனுப்பி நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்காக மத்திய அரசு வழங்கும் மானிய நிதியில் வாங்கப்பட்ட இயந்திரங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தி.மு.க.,வினருக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு விடப்படுவதாகவும், இதனால் சாமானிய விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
மத்திய அரசின் ‘ஆத்மா’ (ATMA) வேளாண் தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் வேளாண் பட்டதாரிகளின் ஊதிய விவகாரத்திலும் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக நாகராஜ் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு மாதம் 45,000 ரூபாய் ஊதியம் நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு அவர்களுக்கு வெறும் 15,000 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகக் கூறினார். மீதமுள்ள நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்தப் பணியாளர்கள் வேளாண் பணிகளுக்குப் பதிலாக, முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு விவசாயிகளைக் திரட்டி வரும் பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

















