கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், நெல்லை டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, சாராள் தக்கர் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலை திறந்துவைத்தார். தொடர்ந்து பல்வேறு மதம் சார்ந்த தலைவர்கள் முன்னிலையில், முதலமைச்சர் கேக் வெட்டி, அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்.
விழாவில் உரையாற்றிய அவர், இந்துகளும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேணடும் என்றும், அதற்கு இதுபோன்ற விழாக்கள் உதவும் என்றும் கூறினார்.
புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கிறிஸ்துமஸூக்குள் அதற்கான ஆணைகள் வழங்கப்படும் என்றும், ஆசிரியர் தேர்வு குறித்து புதிய அரசாணையில் கையெழுத்திட்டிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஆன்மிகத்தின் பெயரில் சில அமைப்புகள் அழைத்துச் செல்லும் வழி, வன்முறைக்கான பாதை என்பதை தமிழகம் உணர்ந்திருக்கிறது என்றும், சகோதரத்துவமும், பகுத்தறிவும் தான் நமது தமிழ்நாடு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
















