தமிழகத்தின் முக்கிய மீன்பிடித் தலமான ராமேஸ்வரத்தில், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். வாராந்திர ஓய்வு நாளான நேற்று, மீனவர்கள் தங்கள் படகுகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவகாமி நகரைச் சேர்ந்த கணேசன் (50) என்ற அனுபவம் வாய்ந்த மீனவர், முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் இயந்திரக் கோளாறைச் சரிசெய்வதற்காகக் கடலுக்கு அடியில் இறங்கியுள்ளார். வழக்கமாகச் சில நிமிடங்களில் மேலெழும்பி வரும் அவர், நீண்ட நேரமாகியும் வராததால் சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த மரைன் போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் நேற்றிரவு வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், பலத்த காற்று மற்றும் நீரோட்டம் காரணமாக அவரைத் தேடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. இன்று இரண்டாவது நாளாகச் சங்கு குளிக்கும் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாயமான கணேசனை உடனடியாகக் கண்டுபிடித்துத் தரக் கோரியும், தேடுதல் பணியைத் துரிதப்படுத்த வலியுறுத்தியும், அவரது குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
“எங்கள் குடும்பத்தலைவரை மீட்கும் வரை எந்தப் படகும் கடலுக்குச் செல்லக் கூடாது” என உறவினர்கள் போர்க்கொடி தூக்கியதால், ராமேஸ்வரம் விசைப்படகுகளுக்கு இன்று வழங்கப்பட வேண்டிய மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Tokens) நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாயமான கணேசனின் மனைவி இதய நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமான கணேசன் மாயமான செய்தி அந்தத் தம்பதியினரின் உறவினர்களை நிலைகுலையச் செய்துள்ளது. “எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்” என அவரது மனைவி கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. தற்போது கடலோரக் காவல் படையினரும் தேடுதல் பணியில் இணைந்துள்ளனர்.
















