திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில், அரசின் தடையை மீறி சட்டவிரோத முறையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கனரக இயந்திரங்களின் பயன்பாடு தொடர்ந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் சொந்த தொகுதியான ஆத்தூர் பகுதிக்குட்பட்ட பெரும்பாறை, மஞ்சள் பரப்பு, வெள்ளரிக்கரை, நேர்மலை, செல்வம் பாறை ஆகிய மலைக் கிராமங்களில், அனுமதியின்றி ‘ஹிட்டாச்சி’ மற்றும் போர்வெல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
நேர்மலை பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில், இன்று சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, அவர்கள் ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்துவிட்டதாகவும், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு பன்றிமலை பகுதியில் அனுமதியின்றி போர்வெல் அமைத்த அதே வாகனம்தான் தற்போது நேர்மலை பகுதியிலும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த வாகனம் குறித்த தகவல்கள் தெரிந்தும் அதிகாரிகள் ஏன் மௌனம் காக்கிறார்கள்?
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், செய்திகள் வெளியான பின்பும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரமுகர்களைக் காப்பாற்ற வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மலைப் பகுதிகளில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர்க்கவும் கனரக இயந்திரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றில் பறக்கவிடப்பட்ட அரசாணையால் மலைக் கிராமங்களின் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்தச் சட்டவிரோதப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

















