கோவையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வரும் இளம்பெண் ஒருவருக்கு, ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட தேவையற்ற பார்சல்களை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபரை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சொந்தமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் ரீதியாகப் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இவருக்கு, கடந்த சில நாட்களாக வினோதமான முறையில் தொல்லைகள் வரத் தொடங்கின. இவரது வீட்டு முகவரிக்குத் தினமும் காலை முதல் இரவு வரை விதவிதமான ஆன்லைன் நிறுவனங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பார்சல்கள் வர ஆரம்பித்தன.
யாரோ ஒரு நபர் அந்தப் பெண்ணின் முகவரி மற்றும் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, விலையுயர்ந்த பொருட்களை ‘Cash on Delivery’ (பணம் வழங்கிய பின் பொருளைப் பெறுதல்) முறையில் ஆர்டர் செய்துள்ளார். அந்தப் பார்சல்களில் அந்தப் பெண்ணின் பெயருடன் மிகவும் ஆபாசமான வார்த்தைகளையும் சேர்த்து முகவரியில் குறிப்பிட்டிருந்தது அந்தப் பெண்ணைத் திகைக்க வைத்தது.
தான் ஆர்டர் செய்யாத பொருட்களைத் திருப்பியனுப்புவதற்கும், டெலிவரி நபர்களிடம் விளக்கம் அளிப்பதற்கும் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 முறைக்கும் மேல் அவர் பதிலளிக்க வேண்டியிருந்தது. இதனால் அவரது தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணின் முகவரியைப் பயன்படுத்தி ஆர்டர் செய்த நபரின் ஐ.பி (IP) முகவரியை வைத்துக் குற்றவாளியைக் கண்டறிந்தனர். அந்த நபர் எதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டார்? முன்பகை காரணமா அல்லது ஒருதலைக் காதலா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

















