உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மார்கழி மாதத்தின் முக்கியத் திருவிழாவான எண்ணெய் காப்பு உற்சவம் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 3-ஆம் தேதி வரை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த 10 நாள் திருவிழாவின் போது, தினமும் மாலை 6 மணி அளவில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுமண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அம்மனுக்குச் சிறப்புத் தைலக்காப்பு (எண்ணெய் காப்பு) மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலைச் சென்றடைவார்.
உற்சவத்தின் 10 நாட்களிலும், 100 கால் மண்டபத்தில் உள்ள நடராஜர் சன்னதி முன்பாக மாணிக்கவாசகர் சுவாமிகள் எழுந்தருளுவார். அங்கு தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடல்கள் பாடப்பட்டுச் சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் மாணிக்கவாசகர் நான்கு ஆடி வீதிகளில் திருவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதிருவிழாவின் பத்தாம் நாளான ஜனவரி 3-ஆம் தேதி பொன்னூஞ்சல் உற்சவம் நடைபெறும். அன்று இரவு திருஞானசம்பந்தர் சன்னதியில் திருவெண்பா பாடல்கள் நிறைவு பெற்றதும், சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு வாகனங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து கோவிலுக்குள் வந்தடைவர்.மார்கழி மாதத்தின் இந்தக் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் அம்மனுக்குத் தைலக்காப்பு இடும் இந்த வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

















