தேசிய மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடையே மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட பேரணி இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வை, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் இந்தப் பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. “இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு”, “எரிபொருளை சேமிப்போம்” மற்றும் மின் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம், காமராஜர் சிலை மற்றும் பெரியார் சிலை வழியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சாந்தி, செயற் பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன், கார்த்திக், மகேஸ்வரி, முத்துப்பாண்டி, வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களைக் கையாள்வது குறித்துப் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

















